search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரசாயன பொருள்"

    தமிழகத்தில் விற்கப்படும் மீன்களில் ரசாயன பொருள் சேர்க்கப்படவில்லை. இது திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #Minister #jayakumar #ADMK
    சென்னை:

    மீன் வளர்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதுடன், மீன் வளர்ப்போரை ஊக்குவிக்கவும், உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு 2001-ம் ஆண்டு அறிவித்தப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 10-ந்தேதி தேசிய மீன் வளர்ப்போர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் சென்னை நந்தனத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் கோபால் தலைமை தாங்கினார். மீன்வளத்துறை இயக்குனர் டாக்டர் சமீரன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில், சிறந்த மீன் வளர்ப்போருக்கான விருதை மதுரையை சேர்ந்த அழகுரவி, சிறந்த முறையில் கடலில் மிதவை கூண்டுகளில் மீன் வளர்ப்போரில் கோவளத்தை சேர்ந்த மீனவர் குழு முதல் பரிசும், ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் எபி, ஹெஸ்டர் ஆகியோர் 2-வது பரிசும், அதே பகுதியை சேர்ந்த டேனியல், சூசைசத்தியகுரு ஆகியோர் 3-வது பரிசும் பெற்றனர். இவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பரிசுகளை வழங்கினார்.

    அத்துடன் 2017-2018-ம் ஆண்டு மீன் குஞ்சு வளர்க்க 100 சதவீதம் இலக்கை எட்டியதற்காக பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து அமைச்சர் தலைமையில் உள்நாட்டு மீனவர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மின்சார கட்டண சலுகை, மீன்பண்ணை அமைக்க அனுமதி மற்றும் மானியம், மீன்களுக்கான உணவுகளை கிடைக்க வழி செய்வது, மீன் அங்காடிகள் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உரிய உத்தரவை வழங்க அமைச்சர் உத்தரவிட்டார்.

    பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் மீன்களில் ‘பார்மலின்’ என்ற ஒருவகை ரசாயனப்பொருள் சேர்க்கப்பட்டதாக வெளியான தகவல் திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தியாகும். மீன்களில் எந்த ரசாயன பொருளும் சேர்க்கப்படவில்லை.



    தமிழகத்துக்கு மொத்த தேவையில் 70 சதவீதம் அளவுக்கு மட்டுமே மீன்கள் பிடிக்கப்படுகின்றன. அவற்றை ரசாயனங்களை பயன்படுத்தி பதப்படுத்தி வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.

    அண்டை மாநிலங்களில் மீன்களில் ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் எந்தப்பகுதிக்கு மீன்கள் கொண்டு வந்தாலும், அவற்றை கடும் சோதனைக்கு பின்னரே விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சோதனையில், மீன்வளத்துறை, உணவு பாதுகாப்பு துறை மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழகம் ஆகிய இணைந்து ஆய்வு மேற்கொள்ளும். இதுதொடர்பாக, மீனவர் கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Minister #jayakumar #ADMK
    ×